தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் #PMModi

Published On 2026-03-11 02:39 IST   |   Update On 2026-03-11 02:39:00 IST
  • தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
  • பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

திருச்சி:

தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசார கூட்டங்கள் பெரிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் திருவள்ளூரில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் ஒரே மேடையில் கைகோர்த்தனர்.

இரண்டாவது முறையாக கடந்த வாரம் தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடி புதுச்சேரி சென்று அங்கு ஆரோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து, மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அதன்பின், பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். சட்டசபைத் தேர்தலுக்கு முன் தமிழகத்தில் இன்னும் சில முக்கிய நகரங்களில் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். திருச்சி பஞ்சப்பூரில் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை, திடல் அமைக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு முன் அதே பகுதியில் மத்திய அரசு விழா நடக்கிறது.

இந்திய எண்ணெய் கழகம் சார்பில் சென்னை மணலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லூப் ஆயில் திட்டம், குழாய் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தமிழகத்தின் முக்கிய 4 வழிச்சாலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைகள், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 4 வழிச்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதன்பின், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் தேசிய ஜனநாயகக்கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். இந்த நிகழ்வுகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்து.

Tags:    

Similar News