தமிழ்நாடு செய்திகள்

திருத்தணி முருகனே வந்து திருத்தினாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள் போல.. பா.ஜ.க.வை சாடிய காங்கிரஸ் எம்.பி.

Published On 2025-02-20 08:14 IST   |   Update On 2025-02-20 08:14:00 IST
  • பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை.
  • பிரதமர் மோடி, தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மயிலாடுதுறை எம்.பி. சுதா செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்துக்கு ஏதாவது ஒரு நிதியை, நிதிஅமைச்சரும், பிரதமரும் ஒதுக்குவார்கள் என்று நம்பிக்கையோடு தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு சின்ன அறிவிப்பு கூட கிடையாது. நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். பாராளுமன்றத்தில் பெரிய அளவில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது குறித்து குரல் எழுப்பினோம். தமிழகத்திற்கா? என்ற வெறுப்புணர்வோடு தான் இன்றைக்கு நிதியமைச்சர் தமிழகத்தை பார்க்கிறார்.

அதைப்போன்று இங்கு இருக்கிற அண்ணாமலை தமிழகத்துக்கு நிதி கேட்க வேண்டியதற்கு பதிலாக மற்ற கதையெல்லாம் பேசுகிறார். தமிழக மக்கள் ஆகட்டும், தமிழ் மண்ணாகட்டும் எல்லாவற்றையும் வெறுப்பது போன்றுதான் பிரதம மந்திரி நடந்து வருகிறார். திருக்குறள், தமிழ் என பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை. நாம் செலுத்தும் வரியை கேட்கிறோம்.

கல்விக்கு இந்தாண்டு வர வேண்டிய 4,500 கோடி ரூபாய் கேட்டால், மும்மொழி கொள்கையை ஒத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஒரு போதும் தமிழ் மக்களும், தமிழ் மண்ணும், தமிழ் உணர்வாளர்களும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கிற்கு தலை வணங்க மாட்டோம். தமிழ் மொழியை கற்றவர்கள் உலக அரங்கில் தலைசிறந்தவர்களாக உள்ளனர். இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

பிரதமர் மோடி, தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், தமிழக மக்களுக்கு அவர் செய்வது பெரிய துரோகம். கல்விக்கான தொகையை கேட்கிறோம் என்பதற்காக திருப்பரங்குன்றம், திருத்தணிக்கு போய் பிரச்சனை என முருகனை வைத்து திசை திருப்புகிறார்கள். முருகனின் பெயரை வைத்துக்கொண்டு எல்லா வித்தைகளையும் செய்து வருகிறார்கள். முருகனே வந்து திருத்தினாலும், இவர்கள் திருந்த மாட்டார்கள். ஆனால் ஒருநாள் முருக பெருமான் சூரனை எப்படி வதம் செய்தாரோ அதுபோன்று ஆர்.எஸ்.எஸ்.கும்பலை வதம் செய்யப்போகிறார் என்றார்.

Tags:    

Similar News