அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை சரண்டர் செய்து விட்டார்- எடப்பாடி பழனிசாமி மீது முதலமைச்சர் பாய்ச்சல்
- 2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அ.தி.மு.க. கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல்.
- 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பா.ஜ.க.-அ.தி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. பயிற்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன்னோட சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க. விடம் அடகு வைத்துள்ள நிலையில், மக்களுடைய உரிமைகளைப் பற்றி கவலைப்பட அக்கட்சிக்கு நேரம் இருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும்தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என்று நான் உறுதி அளிக்கிறேன். தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள் என்று அதன் தலைவர் என்ற முறையில் நான் உறுதி அளிக்கிறேன்.
2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அ.தி.மு.க. கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பா.ஜ.க.-அ.தி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை-வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அந்தக் கட்சியை, அமித்ஷாவிடம் விழுந்து சரண்டர் பண்ணி விட்டார். அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பவில்லை. அவரின் கட்சிக்காரங்களும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு போகவில்லை. வி.சி.க. வர்றாங்க கம்யூனிஸ்ட்டுகள் வர்றாங்க காங்கிரஸ் வர்றாங்க என்று அவரும் தினமும் சொல்லி பார்த்தார். ஆனால் யாரும் அங்க போகவில்லை. மக்களும் அவர் பேசுவதை நம்பத் தயாராக இல்லை.
தமிழ்நாட்டுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ள அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவங்களோட நம்பிக்கையை பெற்று அதை நம் கூட்டணிக்கான வாக்குகளாக மாத்த வேண்டும். அந்த கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கிறது.
தி.மு.க. 7-வது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் இருக்கு என்று நிரூபிக்கணும். கலைஞரின் உடன்பிறப்புகள், நினைத்ததை செய்து காட்டுவார்கள் என்று புரிய வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.