போராட்டக்களமாக மாறிய சென்னை - ஒரே நாளில் 4 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
- சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை:
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று 24-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் திரண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம், முதல்-அமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் என்று கோஷமிட்டனர். பல்வேறு பகுதியிலிருந்து கோட்டை ரெயில் நிலையத்தில் ஒன்று சேர்ந்த அவர்கள் மொத்தமாக பாரிமுனை பகுதியில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல பகுதி நேர ஆசிரியர்கள் இன்று 13-வது நாளாக கல்லூரி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முகாமிட்டு அவர்கள் போராடி வருகிறார்கள். அரசின் ஊதிய உயர்வை ஏற்காமல் தொடர்ந்து போராடி வரும் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.
சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு ஊழியர் மயக்கம் அடைந்தார். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மயக்கமடைந்த அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.