எல்.ஐ.சி. அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம் - பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்
- தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.
- கரும்புகை மண்டலம் ஏற்பட்டதால் அவரும் அலுவலக கதவு அருகே மயங்கி கிடந்துள்ளார்.
மதுரை:
மதுரை மேலவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 17-ந்தேதி அலுவலகத்தின் 2-வது மாடியில் மாலை நேரத்தில் புதிய எல்.ஐ.சி. பாலிசி அறிமுக கூட்டம் நடந்தது. இதில் முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி, உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள், ஏஜெண்டுகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் அனைவரும் சென்ற நிலையில் கல்யாணி நம்பி, ராமகிருஷ்ணன் ஆகியோர் புறப்பட தயாரானபோது திடீரென அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதில் அலுவலக அறையில் ராம கிருஷ்ணன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய படி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலுவலகத்திற்குள் இருக்கையின் அடியில் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி நம்பி உடல் கருகி இறந்து கிடந்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி தீ விபத்து வழக்காக பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கல்யாணி நம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பவத்தன்று எனது செல்போனில் தொடர்பு கொண்ட எனது தாயார் என்னை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..., போலீசாரை வரழையுங்கள் என்று சில நொடிகள் கதறினார். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அலுவலக அறை இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தது என்று அவரது மகன் லட்சுமி நாராயணன் போலீசில் புகார் செய்திருந்தார்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 17-ந்தேதி இரவு நடந்த எல்.ஐ.சி. கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர்.
தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
மருத்துவ சிகிச்சையில் இருந்த ராம கிருஷ்ணனிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண் மேலாளரை பெட்ரோல் ஊற்றி ராமகிருஷ்ணன் எரித்தது தெரியவந்தது.
விபத்து தொடர்பான காப்பீடு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கல்யாணி நம்பிக்கு புகார் கிடைத்தது.
இந்த முறைகேட்டில் அங்கு உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக ராமகிருஷ்ணனிடம், கல்யாணி நம்பி விசாரணை நடத்தி உள்ளார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கல்யாணி நம்பியை தாக்கவும் ராம கிருஷ்ணன் முயன்றுள்ளார். ஆனாலும் முறைகேட்டு தொகையை உடனடியாக அலுவலக கணக்கில் செலுத்துமாறு கண்டிப்புடன் கல்யாணி நம்பி கூறியதாக தெரிகிறது. மேலும் தாமதமானால் முறைகேடு தொடர்பாக போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் ராம கிருஷ்ணனுக்கு, மேலாளர் கல்யாணி நம்பி மீது கடும் ஆத்திரம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கூட்டம் முடிந்ததும் கல்யாணி நம்பி, ராமகிருஷ்ணனிடையே முறைகேடு தொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், அங்கு ஜெனரேட்டர் பயன் பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்து வந்து அலுவலக அறையில் இருந்த கல்யாணி நம்பி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அலுவலக அறையும் பூட்டி உள்ளார். இதனால் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த கல்யாணி நம்பி சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.
இந்த விஷயத்தில் தன் மீது சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது போன்று அனைவரும் நம்புவதற்காக அறைக்கு வெளியே மற்ற பகுதிகளிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ராமகிருஷ்ணன் மீதும் தீப்பிடித்தது. அங்கு கரும்புகை மண்டலம் ஏற்பட்டதால் அவரும் அலுவலக கதவு அருகே மயங்கி கிடந்துள்ளார்.
இந்த நிலையில் தான் பொதுமக்கள் அவரை மீட்டுள்ளனர். ஆனால் கல்யாணி நம்பி அலுவலகத்திற்குள் இருந்ததாலும் தீ பரவி கரும் புகை சூழ்ந்திருந்ததாலும், மீட்க வந்தவர்களால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் தீயில் கருகி பலியாகி விட்டார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தீ விபத்தாக வழக்குப்பதிவு செய்திருந்த முதல் தகவலறிக்கையை மாற்றி கொலை வழக்காக திலகர் திடல் போலீசார் மாற்றினர். இந்த வழக்கில் உதவி மேலாளர் ராம கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.