குடும்பத்தினரோடு நேரில் சென்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள்.
- நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் அடையாறு போட் கிளப்பில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.யின் வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கவுரவப்படுத்திய தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் சபரீசனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு 3 தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு.
நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.