முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது- அண்ணாமலை
- அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு தான் தி.மு.க.வில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் ஏர் ஷோ கூட நடத்த தெரியாத முதலமைச்சர் தான் உள்ளார். ஆனால் அவர் மணிப்பூர் பற்றி பேசுகிறார்.
கோவை:
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.கட்சியினர், தி.மு.க.வினர் காட்டும் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு யாருடைய டப்பிங்கும் தேவையில்லை.
உதயநிதி ஸ்டாலினுக்கு சந்தானம் டப்பிங் பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் டப்பிங் தேவைப்படுகிறது. முதலமைச்சருக்கு டப்பிங் செய்ய அ.தி.மு.க.வில் இருந்து இம்போர்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லியில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. வளர்ந்து கொண்டு இருக்கிறது.
2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை விட, 2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 7 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அது 20 சதவீதத்திற்கு கீழே சென்று விடும்.
அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு தான் தி.மு.க.வில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அ.தி.மு.கவில் இருந்து தி.மு.க.விற்கு வந்த 13 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் கோவில்களுக்கு தானம் வழங்ககூடிய பசுக்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கத்திற்கும் உரிய கணக்கு இல்லை. தமிழ்நாட்டில் உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து கொண்டிருக்கிறது.
பெங்களூருவில் ஏர் ஷோ நடத்தினார்கள். மத்திய அரசின் பார்வையில் அது நடந்தாலும் அவர்கள் சிறப்பாக நடத்தினார்கள். ஆனால் சென்னையில் ஏர் ஷோ கூட நடத்த தெரியாத முதலமைச்சர் தான் உள்ளார். ஆனால் அவர் மணிப்பூர் பற்றி பேசுகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.