தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000: தோல்வி பயத்தில் திமுக நடுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது!- அன்புமணி

Published On 2026-01-04 14:10 IST   |   Update On 2026-01-04 14:10:00 IST
  • திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர்.
  • தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.

சென்னை :

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை ஓரளவாவது தணிக்கும் வகையில், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்படுவது சரியானதே.

கடந்த ஆண்டும் இதே காலத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆனால், மக்களுக்கு ஒரு பைசா கூட பொங்கல் பரிசாக திமுக அரசு வழங்கவில்லை. ஆனால், இப்போது வழங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர். ஆனால், அவர்களை திரும்பிக் கூட பார்க்காத திமுக அரசு, இப்போது அவர்களை ஏமாற்றும் வகையில் ஒரு மோசடி ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.

இன்னும் 50 நாள்களில் அறிவிக்கப்படவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு, அதிலிருந்து தப்புவதற்காகவே இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் நிச்சயமாக வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவார்கள் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News