தமிழ்நாடு செய்திகள்

சிறையில் இருந்துகொண்டு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் ஒருவர்!

Published On 2024-04-08 13:40 IST   |   Update On 2024-04-08 13:42:00 IST
  • தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.
  • பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை.

கோவை:

கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று கோவை சரவணம்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். நாளை மாலை தென்சென்னை, மத்திய சென்னை வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று ஆதரவு திரட்ட உள்ளார்.

அதன்பிறகு மறுநாள் காலை வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், மதியம் கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.

பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை.

தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு கடந்த 33 மாதங்களில் எத்தனை கிராமங்களுக்கு சென்று இருக்கிறார் என்று தி.மு.கவினரால் சொல்ல முடியுமா?. அவர் வெளிநாடுகளுக்கு செல்வார். தமிழகத்தில் நகரங்களுக்கு சென்று கை காட்டி விட்டு சென்று விடுவார்.

தி.மு.க.வினர் தாங்கள் தான் ஏதோ காலை உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் இந்த திட்டமானது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும். கோவைக்கு என்று தனியாகவும் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம்.

ஜெயிலில் இருந்து கொண்டு ஒருவர் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். அவர் எழுதிய கதையை தான் இங்கு வந்திருக்க கூடிய அமைச்சர்கள் பேசி வருகிறார்.

ஜெயிலில் இருந்து கொண்டு, தங்கம், பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அது இந்த முறை நடக்காது. எவ்வளவு தங்க சுரங்கத்தையே தோண்டி வந்து கொடுத்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஜூன் 4-ந்தேதி சாமானியனின் குரல் மூலம் தெரிய வரும். எங்களுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும். நான் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News