இந்தி திணிப்பு குறித்த தமிழிசை சவுந்தரராஜனின் பதிவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., பதில்
- தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் அறிவுறுத்துங்கள்.
- இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள்.
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சி.பி.எம். எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில், மாண்புமிகு அஷ்வினி வைஷ்ணவ் தயவுசெய்து திருச்சி ரெயில் நுழைவு வாயிலுக்கு நமது மொழி தமிழ் மொழிபெயர்ப்பை முறையாக வைக்கவும், தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் அறிவுறுத்துங்கள். ஏனெனில் சில அதிகாரிகள் செய்த தவறுகள் காரணமாக மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தேவையற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாமக மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள். இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது. வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சி," என கூறியுள்ளார்.