தமிழ்நாடு

சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம்

Published On 2024-02-14 04:53 GMT   |   Update On 2024-02-14 05:38 GMT
  • எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின் வரிசையில் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தள்ளப்பட்டார்.
  • ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. 4-வது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை:

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கையும் இருந்தது.

இருவரும் அ.தி.மு.க.வில் ஒன்றாக இருந்த வரை இருக்கை பிரச்சனை எழவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் புதிய எதிர்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கையை மாற்றி விட்டு அந்த இடத்தில் ஆர்.பி. உதயகுமாரை அமர வைக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்தார். இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தவும் செய்தார். ஆனாலும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தார்.

இதற்கிடையில் பா.ஜனதாவை எதிர்த்து தி.மு.க. கடுமையான அரசியல் செய்து வரும் நிலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும், அந்த கூட்டணியில் இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையை சாதுர்யமாக கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி சட்டசபை விவாதத்தின்போது சபாநாயகர் முறையாக முடிவெடுப்பதில்லை. நான் 4 முறை எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக கடிதம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

மு.க.ஸ்டாலினும் உடனே குறுக்கிட்டு எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

அவர் சொன்ன மறுநாளே இருக்கை மாற்றம் அதிரடியாக நடந்தது. அதாவது எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின் வரிசையில் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தள்ளப்பட்டார்.

அந்த வரிசையில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. 4-வது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த வரிசையில் இருந்த மற்றவர்கள் ஒவ்வொரு இருக்கை நகர்ந்து அமர்ந்தனர். கடைசியில் முன்னாள் சபாநாயகர் தனபால் இருந்த 207-வது இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் இதுவரை அமர்ந்திருந்த இடத்தில் ஆர்.பி.உதயகுமார் அமர வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News