தமிழ்நாடு செய்திகள்

சனாதனம் என்பது பாகுபாடு: ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியிலிருந்து நீக்க வேண்டும் - பெ.சண்முகம்

Published On 2026-01-27 19:36 IST   |   Update On 2026-01-27 19:36:00 IST
  • மனதில் சனாதன தர்மம் வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளார்
  • சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது.

திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு தமிழ்நாடு அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் மலையில் வழக்கத்திற்கு மாறாக கார்த்திகை தீபம் ஏற்றக்கூறிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை பின்பற்றமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தது.

இந்நிலையில், மனதில் சனாதன தர்மம் வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி.ஆர்.சுவாமிநாதன், "பொது கடமைகளை செய்யும் போது சனாதன தர்மத்தை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்; பொது வாழ்வில் ஒருவரது பங்கையோ குணத்தையோ வெறும் தொழில் ரீதியான அறிவு மட்டும் வரையறுக்காது. நான்கரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் முழுமையாக பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். சனாதன தர்மத்தை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

சனாதனம் குறித்த ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. சாதிக்கொரு நீதி சொல்வது. இந்திய அரசியல் சாசனம் இதற்கு நேர் எதிரான விழுமியங்களைக் கொண்டது. சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பதால், அவர் நீதிபதியாக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News