தமிழ்நாடு

போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க. பிரமுகருக்கு தொடர்பு: முதலமைச்சர் விளக்கம் அளிக்க எல்.முருகன் வலியுறுத்தல்

Published On 2024-02-26 07:05 GMT   |   Update On 2024-02-26 07:12 GMT
  • போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
  • தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள்

கோவை:

கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழா பல்லடத்தில், பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார். இது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

"என் மண் என் மக்கள் யாத்திரை" தி.மு.க. அரசின் ஊழல்களையும், இயலாமையையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் யாத்திரையாகவும், பிரதமரின் 10 ஆண்டுகளாக சாதனைகளையும் எடுத்துச்செல்லும் யாத்திரையாக அமைந்தது. 234 தொகுதியிலும் யாத்திரை முடிந்துள்ளது.

தமிழகத்தில் கிராமம் தோறும் கஞ்சா ஊடுருவி இருக்கின்றது. இதற்கு உதாரணமாக தி.மு.க. நிர்வாகியே ரூ.3000 கோடி அளவிற்கு கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

இந்த போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கத்தை சொல்ல வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள். மேலும் யார் யார் வருவார்கள் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பாருங்கள்.

இன்று மாலை 5 மணிக்கு முக்கிய தகவல் வெளியாகும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, யார் வருகின்றார்கள் என்பதை கொஞ்சம் காத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News