கர்நாடக ஆளுநர் வெளிநடப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
- முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள்.
- ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதே இப்போதைக்கு ஒரே தீர்வு.
ஆண்டின் முதல் பேரவை கூட்டத்தை ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்ற நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்த செய்தியை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதலில் தமிழ்நாடு, பின்னர் கேரளா, இப்போது கர்நாடகா என ஆளுநர்கள் வெளிநடப்பு தொடர்கிறது.
மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க மறுக்கும் ஆளுநர்கள், கட்சி முகவர்கள் போல நடந்துகொண்டு, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள்.
நான் முன்பு கூறியது போல், முதல் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதே இப்போதைக்கு ஒரே தீர்வு.
இந்தியா முழுவதும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் திமுக கலந்தாலோசித்து, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த வழக்கொழிந்த மற்றும் பொருத்தமற்ற நடைமுறையை ஒழிக்க அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ளும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.