தமிழ்நாடு செய்திகள்

Manamadurai | விசாரணைக்கைதி உயிரிழந்த வழக்கு - மதுபான கடைகளை 3 நாட்கள் மூட ஆட்சியர் உத்தரவு

Published On 2026-03-10 14:57 IST   |   Update On 2026-03-10 14:57:00 IST
  • தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.
  • மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைதான கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் டெலிசன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக அவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி திடீரென ஆகாஷ் டெலிசன் இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் சாவில் போலீசார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில் ஆகாஷ் டெலிசன் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

3-வது நாளான இன்று காலையும் சாலைமறியல் தொடர்ந்தது. தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மதுரை, ராமேசுவரத்தில் இருந்து வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் அரசு, தனியார் மதுபான கடைகள், பார்களை 3 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததை தொடர்ந்து 3-வது நாளாக சாலைமறியல் போராட்டம் நடைபெறுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி மதுபான கடைகள், பார்கள் 3 நாட்களுக்கு மூடுமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News