தமிழ்நாடு செய்திகள்

#Manamadurai விசாரணை கைதி உயிரிழப்பு: மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் 3-வது நாளாக போராட்டம்

Published On 2026-03-10 11:33 IST   |   Update On 2026-03-10 11:33:00 IST
  • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
  • தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைதான கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் டெலிசன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக அவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி திடீ ரென ஆகாஷ் டெலிசன் இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் சாவில் போலீசார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில் ஆகாஷ் டெலிசன் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அமைச்சர் பெரியகருப்பன், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் கைவிடப்படவில்லை. 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் இறப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. வெங்கட் ராமன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைதி சாவு குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் இருந்து வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கினர்.

மேலும் ஐகோர்ட்டில் விசாரணை கைதி இறப்பு குறித்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு, அரசு ஆஸ்பத்திரி டீன் ஆகியோர் முன்னிலையில் ஆகாஷ் டெலிசன் உடலை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தடுக்க மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு மனுதாரர் அறிவுறுத்துமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் மானா மதுரையில் 2-வது நாளான நேற்றும் சாலையில் பந்தல் அமைத்து போராட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். 3-வது நாளான இன்று காலையும் சாலைமறியல் தொடருகிறது. அவர்களிடம் போலீசார் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மதுரை, ராமேசுவரத்தில் இருந்து வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News