மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி பிரமாண்ட பொதுக்கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு
- கூட்டத்தில் கூட்டணி கட்சித்தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியை மத்திய மந்திரி பியூஸ் கோயல் மேற்கொண்டு வருகிறார்.
- பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியை வரவேற்கிறார்கள்.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்கள், பிரசாரங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தல் வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித்தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியை மத்திய மந்திரி பியூஸ் கோயல் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த 21-ந் தேதி இரவே சென்னை வந்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
அந்த வகையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று முன்தினம் பியூஸ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்தே அ.தி.மு.க. - பா.ஜ.க. பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் மத்தியில் பேசுபொருளாகிவிட்டது. அதைத்தொடர்ந்து பியூஸ் கோயல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர், புதிய நீதிக்கட்சித் நிறுவனர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசியதோடு, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பும் விடுத்துள்ளார். அதன்படி, கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கேரள மாநில நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 1.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சென்றடைகிறார்.
அங்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரை வரவேற்கிறார்கள். பின்னர், பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கைகளை உயர்த்தி தங்கள் ஒற்றுமையை பறைசாற்ற உள்ளனர்.
பிற்பகல் 3.10 மணிக்கு பொதுக்கூட்ட மேடை ஏறும் பிரதமர் மோடி தனது உரையை முடித்துவிட்டு, மாலை 4.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக செங்கல்பட்டு மாவட்டமே 5 அடுக்கு பாதுகாப்புடன் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.