தமிழ்நாடு செய்திகள்

மாணவி வைகயோஷனாவுக்கு பள்ளி சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூர் பள்ளி மாணவிக்கு டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு

Published On 2026-01-22 13:48 IST   |   Update On 2026-01-22 13:48:00 IST
  • சுதந்திரப்போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோசின் ராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றிய நீரா ஆர்யா என்ற பெண்மணி குறித்து கட்டுரை எழுதினார்.
  • மாணவி வைகயோஷனாவுக்கு பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

திருவாரூர்:

மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், மத்திய கல்வித் துறையும் இணைந்து தேச பக்தியை வளர்க்கும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டியை இணையதளம் வாயிலாக நடத்தியது.

இதில் நாடு முழுவதும் இருந்து 2 கோடி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் திருவாரூர் ஜிஆர்எம் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு பயிலும் மாணவி வைகயோஷனா கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டார்.

இவர் சுதந்திரப்போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோசின் ராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றிய நீரா ஆர்யா என்ற பெண்மணி குறித்து கட்டுரை எழுதினார்.

அந்த கட்டுரையில் நீரா ஆர்யா சுதந்திரப்போராட்ட காலத்தில் எதிர்கொண்ட எதிர்ப்புகள், கணவரே அவரை ஆங்கிலேயர்களிடம் காட்டிக்கொடுக்க முற்பட்டபோது, கணவர் என்றும் பாராமல் அவரை கொலை செய்து தேசபக்திதான் முக்கியம் என்பதை முன்னிறுத்தி வாழ்ந்து மறைந்த தியாக வரலாறு குறித்து எழுதி இருந்தார்.

அவரது இந்த கட்டுரை சிறந்த கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கட்டுரை போட்டியில் வென்ற மாணவி வைகயோஷனாவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வருகிற 26-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த விழாவில் மாணவி வைகயோஷனாவுக்கு பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

இதையடுத்து மாணவி வைகயோஷனாவை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசரிரியர்கள் பாராட்டினர். டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 5 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News