செய்திகள்
விபத்துக்குள்ளான லாரி, வேனை படத்தில் காணலாம்.

பெருந்துறை அருகே விபத்து - வேலூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி

Published On 2018-11-29 05:33 GMT   |   Update On 2018-11-29 05:33 GMT
பெருந்துறை அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியதில் வேலூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். #Accident
சென்னிமலை:

வேலூர் காட்பாடி பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கோதண்டம் (வயது 60) என்ற குருசாமி தலைமை யில் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வேனில் புறப்பட்ட னர்.

வேனில் செந்தில்குமார் (40), பழனி (40), நாகராஜ் (45), நாராயணசாமி (29), விமல் (27), சசி (28), ஜோதி (32), ஸ்ரீமதி (3), அருண் (5), ரோஹித் (7), மோனிஷா (8) உள்பட 13 பேர் இருந்தனர்.

வேனை வேலூரை சேர்ந்த ராஜ்கபூர் (29) என்பவர் ஓட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வேன் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

ஓலப்பாளையம் பிரிவு வந்தபோது ஆந்திர மாநிலத்திலிருந்து சிலிக்கான் லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை வேலூரை சேர்ந்த பலராமன் (53) ஓட்டிச் சென்றார்.

அந்த லாரியை ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் டிரைவர் முந்த முயன்றார். அப்போது லாரியின் பின்புறத்தில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பழனி, நாகராஜ் ஆகிய 2 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள். குருசாமி கோதண்டத்தின் 2 கால்களும் முறிந்தன.

வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Accident


Tags:    

Similar News