2025 REWIND: பீகார் சட்டசபை தேர்தல்: சறுக்கிய இந்தியா கூட்டணி - எகிறி அடித்த என்.டி.ஏ. கூட்டணி
- பீகார் மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரு கட்டமாக நடைபெற்றது.
- கருத்துக்கணிப்புகளில் பெற்ற இடங்களைவிட அதிக இடங்களில் என்.டி.ஏ. கூட்டணி வென்றது.
பாட்னா:
காலை நேரத்தில் கூட்டம் அதிகம் காணப்படும் மார்க்கெட். காய்கறிகள் அப்போதுதான் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அங்கு காய்கறி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தான் மணி.
அப்போது அங்கு வந்த முருகன், என்னடா மணி, SIR படிவம் எல்லாம் நிரப்பிக் கொடுத்துட்டியா என கேட்டான்.
ஆமாம்னே கொடுத்துட்டேன். எலக்ஷன் கமிஷனுக்கு ஏண்ணே இந்த தேவையில்லாத வேலை. ஒழுங்கா பழையபடி இருந்தா என்ன கெட்டுப் போச்சி என அங்கலாய்த்தான்.
அப்படி இல்லைடா மணி. இந்த மாதிரி சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டால் தான் போலி வாக்காளர்களை நீக்க முடியும். அப்படி செய்தால் தேர்தலில் கூடுதலாக வாக்கு சதவீதம் பதிவாகவும் வாய்ப்பு இருக்கு. அதனாலதான் எலக்ஷன் கமிஷன் இதுபோன்ற பணிகளை செய்து வருது. சமீபத்தில் பீகார் மாநிலத்திலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டதால் வாக்கு சதவீதம் இதுவரை இல்லாத அளவு அதிகரிச்சிருக்கு என்றான் முருகன்.
அப்படியா, பீகாரில் அப்படி என்ன நடந்தது சொல்லு கேட்போம் என கேட்டான் மணி.
கடந்த மாதம் நடந்த பீகார் சட்டசபை தேர்தல் குறித்து முருகன் கூறியதன் சுருக்கம் வருமாறு:
பீகார் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரு கட்டங்களாக நடைபெற்றது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. மற்றொரு கட்சியான லோக் ஜனசக்தி 29 இடங்களிலும், சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்த ராஷ்டிரீய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஏனைய 39 தொகுதிகளில் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன.
பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தன.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது.
ஆரம்பத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே முன்னிலை வித்தியாசம் குறைவாகவே இருந்தது. நேரம் செல்லச் செல்ல முன்னிலை இடைவெளி அதிகரித்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னிலை நிலவரம் ஏறுமுகமாகவும், இந்தியா கூட்டணியின் முன்னிலை நிலவரம் இறங்குமுகமாகவே இருந்தது.
இறுதியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளையும்விட தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் கிடைத்தன.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் இடங்களில் வெற்றி கிடைத்தன. அந்தக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
மொத்தத்தில் 2025-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஏற்றத்தையும், காங்கிரஸ் கட்சி கடும் சறுக்கலையும் சந்தித்தது.
ஆனால் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையால் தோற்றோம் என காரணம் கூறியது.
பீகார் தேர்தலில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை மற்ற மாநிலங்களுக்கும் பயன்படுமா என்பதை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் என முடித்தான் முருகன்.
என்னவோ நீ சொல்ற, SIR நடவடிக்கை இங்க எல்லாம் எந்த விளைவை ஏற்படுத்துமோ தெரியலை என்றபடியே லாரியில் இருந்து இறக்கிய மூட்டைகளுக்கான பணம் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டான் மணி.