புதுச்சேரி

புதுச்சேரியில் மேலும் 75 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

Published On 2025-12-16 14:43 IST   |   Update On 2025-12-16 14:43:00 IST
  • தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பஸ்களின் ஓட்டுநர்களை நியமிப்பது, பஸ்களுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
  • எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த திட்டத்தில் மகாராஷ்டிரா, அரியானா, ஒடிசா, குஜராத் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களும், சண்டிகர், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2024-25-ம் ஆண்டிற்கான 4,588 எலெக்ட்ரிக் பஸ்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ரூ.57 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்காக ரூ.20 ஆயிரம் கோடி வழங்க உள்ளது. மீத தொகையை இயக்கப்படும் பஸ்களுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே அதற்கான தொகையை ஏற்கும்.

இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி புதுவை முழுவதும் எலெக்ட்ரிக் பஸ்கள் மூலம் பொது போக்குவரத்தை மேம்படுத்த கவர்னர் கைலாஷ்நாதன் தீவிரம் காட்டி வருகிறார்.

மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இடையில் இயக்கவும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பஸ்களை புதுவை நகர பகுதிகளுக்குள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் பஸ்களை மறைமலை அடிகள் சாலை தாவரவியல் பூங்கா எதிரேவும் மொரட்டாண்டிக்கு அருகே உள்ள நியூகோவின் டெப்போவிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பஸ்களின் ஓட்டுநர்களை நியமிப்பது, பஸ்களுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் கண்டக்டர்களை நியமிக்கும். புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 24 மற்றும் நகரங்களுக்குள் இயக்கப்படும் பஸ்களுக்கு ரூ. 22 என கணக்கிட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள லாரி முனையத்தில் 3.5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அருகில் உள்ள துணை நிலையத்திலிருந்து கேபிள்கள் புதைக்கப்பட உள்ளது.

பணிமனை கட்டுவதற்கு ரூ. 12.75 கோடிக்கு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடும் பணி நடந்துவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், தானியங்கி கட்டண வசூல் அமைப்புகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

இதற்கிடையே ஏற்கனவே புதுவையில் தனியார் பங்களிப்புடன் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News