எதையாவது பேச வேண்டும் என சில அரசியல்வாதிகள் பேசுகின்றனர்: முன்னாள் முதல்-அமைச்சர்கள் மீது ரங்கசாமி தாக்கு
- இந்த செவிலியர் பணி தேர்வை நிறுத்த சென்னை கோர்ட்டுக்கு சென்றனர்.
- இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தல் வந்துவிடும். அதன்பிறகு பணியிடங்களை நிரப்ப முடியாது.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 226 செவிலியர் அதிகாரிகள் மற்றும் சுகாதரத்துறையின் கீழ் அரசு பொது மருத்துவமனையில் 67 மருந்தாளுநர், இ.சி.ஜி. டெக்னீஷியன், சுகாதார உதவியாளர், தியேட்டர் உதவியாளர், ஏ.என்.எம் ஆகியோருக்கு பணியாணை வழங்கும் விழா நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணியாணை வழங்கி பேசியதாவது:-
இந்த பணியாணை கொடுப்பதை பெரிய விழாவாக எடுக்கலாம். ஆனால் அதற்குள் யாரேனும் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கி வந்துவிடுவார்களோ என்ற பயம். இதனை எவ்வளவோ சிரமப்பட்டு செய்துள்ளேன். இந்த பணியாணை வழங்குவது அவ்வளவு சுலபம் அல்ல. துறையாக இருந்தால் கோப்பை சுத்த விடுவார்கள். பல்வேறு துறைகளுக்கு சென்று வரவேண்டும். சிரமங்கள் இருக்கும். இது சொசைட்டியாக இருந்தும் முறையாக நிரப்புவதற்கு 2 ஆண்டுகள் ஆனது.
இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் செவிலியர் பணி தேர்வில் ஊழல் என்று சில அரசியல்வாதிகள் சொல்கின்றனர். செவிலியர் தேர்வு வெளிப்படையாக நடத்தப்பட்டது. ஆனால் எதையாவது பேச வேண்டும் என்று பேசுகின்றனர். எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் யாரும் குறை சொல்ல முடியாத அளவில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த செவிலியர் பணி தேர்வை நிறுத்த சென்னை கோர்ட்டுக்கு சென்றனர். ஆனால் முடியவில்லை. நீதிமன்றம் தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டது. அதன்பிறகு வேகமாக அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.
இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தல் வந்துவிடும். அதன்பிறகு பணியிடங்களை நிரப்ப முடியாது. அப்போது பல சிரமங்கள் இருக்கும். இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கத்தான் வேகமாக பணி செய்து வருகிறேன். இன்னும் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஓரிரு நாள்களில் 190 ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்க உள்ளோம். மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க இருக்கிறோம். இன்னும் 100 செவிலியர் விரைவில் எடுக்க உள்ளோம். அடுத்த 2 மாதத்தில் 400 மேல்நிலை எழுத்தர் மற்றும் இளநிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுவை காங்கிரசார் கடந்த 21-ந் தேதி முதல் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசை கண்டித்து பாதயாத்திரை நடத்தி வருகின்றனர். இந்த யாத்திரையில் முன்னாள் முதல்-அமைச்சர்களான வைத்திலிங்கம், நாராயணசாமி ஆகியோர் புதுவை அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியுள்ளார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலர் முகமது யாசின், இயக்குநர் செவ்வேள், மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.