புதுச்சேரியில் போகி பண்டிகை நாளில் 2 மடங்கு காற்று மாசுபாடு - ஆய்வில் தகவல்
- 2025-ல் காற்று தரக்குறியீடு 67 ஆக பதிவானது.
- போகி புகையினால் காற்றின் தரம் 'மிதமான' மாசு நிலைக்கு தள்ளப்பட்டது.
புதுச்சேரி:
பழையன கழிதலும், புதியன புகுதலும் தமிழர் மரபு. போகி பண்டிகை புதுமையை வரவேற்கும் நன்னாளாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நாளில் எரிக்கப்படும் பொருட்கள் காற்றில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை புதுச்சேரி ஜவஹர் நகரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம் பதிவு செய்தது.
2025-ல் காற்று தரக்குறியீடு 67 ஆக பதிவானது. 2026 அடர் மூடுபனியும் மாசடைந்த காற்றும் கடந்த 13 முதல் 14-ந் தேதி வரையிலான போகி பண்டிகை நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. போகி புகையினால் காற்றின் தரம் 'மிதமான' மாசு நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த ஆண்டு காற்று தரக்குறியீடு 113 ஆக உயர்ந்துள்ளது. நுரையீரலுக்குள் எளிதில் நுழையக்கூடிய பி.எம்.,-2.5 நுண்ணிய துகள்கள் 64 என்ற நிலையை எட்டி காற்றின் தரத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக மாறியது. பி.எம்.,-10 துகள்களின் அளவு 96 ஆக உயர்ந்து, காற்றில் தூசு மற்றும் புகையின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது. நைட்ரஜன் டை ஆக்சைடு அளவும் 25.4 ஆக உயர்ந்துள்ளது.
இது வாகன புகை மற்றும் எரிப்பு நடவடிக்கைகளின் அதிகரிப்பை காட்டுகிறது. புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசுபாடு இரு மடங்கு அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.