ரவுடி வெட்டிக்கொலை - நண்பர்களிடம் போலீசார் விசாரணை
- சவ ஊர்வலத்தில் அப்புவுக்கும் புதுவை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
- பிரபல ரவுடி பல்லுவிக்கி, ஹேமநாத், சுரேந்தர் சஞ்சீவ் தலைமையில் இந்த கும்பல் அப்புவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியையொட்டி உள்ள தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அப்பு என்ற ஜவகர் (வயது 24). இவர் மீது 2 கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள பேக்கரியை மாமூல் கேட்டு சூறையாடிய வழக்கில் புதுச்சேரி போலீசார் அவரை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் அப்பு, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பாலகணேஷ், சின்ன முதலியார்சாவடியை சின்னப்பிள்ளை ஆகியோருடன் சின்ன கோட்டக்குப்பம் கறிக்கடை சந்து அமைதி நகரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 2 பைக்கில் வந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட கும்பல், அப்புவை சுற்றி வளைத்தது.
அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அப்புவை அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், சரமாரியாக வெட்டினர். இதில் அப்பு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
தகவலறிந்த கோட்டக் குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகச்செட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவ ஊர்வலத்தில் அப்புவுக்கும் புதுவை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
அந்த சம்பவத்தில் இருந்து அந்த கும்பல், அப்பு மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே அப்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பல்லுவிக்கி, ஹேமநாத், சுரேந்தர் சஞ்சீவ் தலைமையில் இந்த கும்பல் அப்புவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
கொலைக்கு முன்னர் அப்புவுடன் மது அருந்தி கொண்டிருந்த பாலகணேஷ் மற்றும் சின்னப்பிள்ளை ஆகியோர் அப்புவின் எதிராளிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என கருதி அவர்கள் 2 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.