புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது
- பொதுமக்கள் மலர் செடிகளை விலைக்கு வாங்கிச்செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மலர் கண்காட்சியையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் வேளாண்துறை சார்பில் வேளாண் விழா 2026, 36-வது மலர், காய், கனி கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது.
கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இன்று தொடங்கி 3 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில் சுற்றுலா பயணிகள், புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் ஏராளமான மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளனர். அதுபோல் விதவிதமான காய், கனி வகைகளும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
மேலும் பொதுமக்கள் மலர் செடிகளை விலைக்கு வாங்கிச்செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், மலர் ராஜா, மலர் ராணி ஆகியோருக்கு பட்டங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார்.
மலர் கண்காட்சியையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சரண்யாசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மலர் கண்காட்சியை முன்னிட்டு தற்காலிக வாகன நிறுத்தமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் பழைய பஸ் நிலையம், நகராட்சி வளாகத்திலும், டிரைவர்கள் மூலம் இயக்கப்படும் 4 சக்கர வாகனங்கள் பழைய துறைமுக பகுதியிலும், சுய டிரைவர் 4 சக்கர வாகனங்கள் அண்ணா திடலிலும் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.