செய்திகள்
கும்பகோணம் மகாமகக்குளக்கரை பகுதியில் இன்று காலை பெய்த மழையில் குடைபிடித்தப்படி செல்லும் பெண்கள்

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை - கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2018-11-01 11:41 IST   |   Update On 2018-11-01 11:41:00 IST
நாகை, வேதாரண்யம் மற்றும் மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. #Northeastmonsoon #Fishermen
நாகப்பட்டினம்:

டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இன்று (1-ந் தேதி) முதல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் நேற்று முதலே பருவ மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நாகை, திருப்பூண்டி, தலைஞாயிறு, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. வேதாரண்யத்தில் அதிக பட்சமாக 38.20 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.இந்த மழை தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா பயிருக்கு பயனை தரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வேதாரண்யம்- 38.20

திருப்பூண்டி-26.60

சீர்காழி-25.20

நாகப்பட்டினம்-18.20

மணல்மேடு-8.20

இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் நகரில் இன்று காலை லேசான தூறல் மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை கும்பகோணத்தில் தூறல் மழை பெய்தது.

இன்று காலை நாகை, வேதாரண்யம் மற்றும் மல்லிபட்டினம், ஆகிய பகுதிகளில் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் கடல் அலைகள் பல அடிகளுக்கு எழுப்பியப்படி இருந்ததால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.  #Northeastmonsoon #Fishermen
Tags:    

Similar News