செய்திகள்

இந்தியாவில் உள்ள முதல்வர்களில் பழனிசாமி மீது தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது- முக ஸ்டாலின்

Published On 2018-10-19 04:25 GMT   |   Update On 2018-10-19 04:25 GMT
இந்தியாவிலேயே ஒரு முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #EdappdiPalaniswami
தஞ்சாவூர்:

தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் தடவையாக நேற்று தஞ்சைக்கு வந்தார்.

தஞ்சையில் இன்று நடைபெறும் பல்வேறு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் வரும் போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் நேற்று மாலை பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா சிறைக்கு சென்றார். அதன் பின் அதிர்‌ஷடத்தில் விபத்து போல் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார்.

பொதுப் பணித்துறையையும், நெடுஞ்சாலைத்துறைகளையும் தன்வசம் வைத்து கொண்டு இதன் மூலம் ரூ.3ஆயிரம் கோடி வரை அவருடைய உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி ஊழல் செய்துள்ளார்.

முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்- அமைச்சர் மட்டுமின்றி அமைச்சர்களும் ஊழலில் திளைத்து வருகின்றனர். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஐயபாஸ்கர் ஆகியோர் மீது சி.பி.ஐ. விசாரணை வந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா இறந்த பிறகு அவர் செய்த ஊழலை விட எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே ஒரு முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான். எனவே இதற்கு பிறகாவது எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இதை தான் மாற்று கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களும் விரும்புகின்றனர். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #EdappdiPalaniswami
Tags:    

Similar News