ரஷ்யா - இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
- இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. அமைதியின் பக்கம் உள்ளது.
- உக்ரைன் போர் தொடர்பான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறோம்.
ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் வந்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அதில், உலக அமைதி, மனிதநேயத்திற்கான காந்தியின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஒத்துழைப்பு, அமைதி கொள்கைகளை உறுதியாக நிலைநாட்டியவர். பூமிக்கு மிகுந்த செல்வாக்கை சேர்த்த மகத்தான தத்துவ ஞானிகளில் ஒருவர் காந்தி. நவீன இந்தியாவின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவர் ஆவார் என்று எழுதி கையெழுத்திட்டார்.
பின்னர் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இதில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் பேசிய பிரதமர் மோடி,
உங்களின் (புதின்) இந்திய வருகை மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது. தனிப்பட்ட முறையில் உங்களுடனான எனது உறவுகள் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள், ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். இந்தியா-ரஷியா உறவுகள் வளர்ந்து புதிய உயரங்களை தொட வேண்டும். உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை விரும்புகிறோம். நாங்கள் எப்போதும் அமைதியை ஆதரிக்கிறோம். இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. மாறாக இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது. இது போருக்கான காலம் அல்ல. அனைவரும் அமைதி பாதையில் செல்ல வேண்டும். அமைதி பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயன் அடையும்.
இந்தியாவில் அதிபர் புதின்
அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். சில நாட்களாக நடந்து வரும் அமைதிக்கான முயற்சிகள் மூலம் உலகம் அமைதிக்கு திரும்பும் என்று நான் நம்புகிறேன். பேச்சுவார்த்தை மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய புதின், "இந்தியா-ரஷியாவின் உறவு நம்பிக்கை மூலம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் போர் தொடர்பான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண நாங்கள் பணியாற்றி வருகிறோம். போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா அளிக்கும் பங்களிப்பை பாராட்டுகிறோம். நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ரஷியாவும் இந்தியாவும் ராணுவத் துறையிலும், விண்வெளி மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற துறைகளிலும் ஒத்துழைப்புகளை கொண்டு உள்ளன. இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் முன்னேற திட்டமிட்டுள்ளோம்." எனக் கூறினார்.
மாநாட்டில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இதில் இருநாடுகளின் உயர்மட்ட குழுவினரும் உடன் இருந்தனர். இரு தலைவர்களும் பல்வேறு துறைகள், வர்த்தக பற்றாக்குறை மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, அணு சக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனைத்தொடர்ந்து இன்று இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் புதினுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்படுகிறது. பின்னர் இன்று இரவு 9 மணிக்கு புதின் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்படுகிறார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணைய் வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்விவகாரத்தில் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பின்னர் இதுதொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் புதின் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது முக்கியத்த வம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.