மகளிர் உலகக் கோப்பை: திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது
- டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 288 ரன்கள் எடுத்தது.
இந்தூர்:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்தூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹீதர் நைட் சிறப்பாக ஆடி சதமடித்து 109 ரன்கள் எடுத்தார். எமி ஜோன்ஸ் அரை சதம் கடந்து 56 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா 4 விக்கெட்டும், ஸ்ரீ சரனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரித் கவுர், தீப்தி சர்மா அரை சதம் கடந்தனர்.
இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 284 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது.