இந்தியா அரைஇறுதிக்கு முன்னேறுமா? வெஸ்ட்இண்டீசுடன் நாளை மோதல்
- இரு அணிகளும் 30 ஆட்டத்தில் மோதியுள்ளன.
- இதில் இந்தியா 19-ல், வெஸ்ட் இண்டீஸ் 10-ல் வெற்றி பெற்றன.
கொல்கத்தா:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நாளையுடன் முடிவடைகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே 2 தோல்வியுடன் வெளியேறியது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (மார்ச் 1) இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.இதில் வெற்றி பெறும் அணி 2-வதாக அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நடப்பு சாம்பியனான இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரைஇறுதிக்கு நுழையுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
லீக் ஆட்டங்களில் அமெரிக்கா (29 ரன்), நமீபியா (93 ரன்), பாகிஸ்தான் ( 61 ரன்), நெதர்லாந்து ( 17 ரன்) ஆகிய அணிகளை வென்ற பிறகு சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. சென்னையில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான நெருக்கடியான போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதே உத்வேகத்துடன் வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் வெளியேறிவிடும். இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் ஆட வேண்டும். ஒருவேளை இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். ஏனென்றால் வெஸ்ட் இண்டீசைவிட நிகர ரன் ரேட்டில் இந்தியா பின் தங்கியுள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிராக ஆடிய வீரர்களே இடம் பெறுவார்கள். மாற்றம் இருக்காது. வீரர்கள் தேர்வு, பேட்டிங் வரிசை மாற்றம் சேப்பாக்கம் மைதானத்தில் நல்ல பலனை அளித்தது. தற்போது இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையுடன் திகழ்கிறது.
அபிஷேக் சர்மா மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். இஷான்கிஷன் (214 ரன்), கேப்டன் சூர்ய குமார் யாதவ் (213), ஷிவம் துபே (158), ஹர்திக் பாண்ட்யா (155), திலக் வர்மா (151) ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார்கள்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை. வேகப்பந்தில் அர்ஷ்தீப் சிங், பும்ராவும் சுழற்பந்தில் வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். 6-வது பவுலர்தான் தலைவலியாக இருக்கிறது. மிகவும் முக்கியமான இந்த ஆட்டத்தில் அதை சரி செய்வது அவசியம். ஷிவம் துபே கடந்த ஆட்டத்தில் 2 ஓவரில் 46 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ளனர். ஹெட் மயர், கேப்டன் ஷாய்ஹோப், ரூதர்போர்டு, போவெல் ஆகியோர் பேட்டிங்கிலும், குடாகேஷ், ஜேசன் ஹோல்டர், ஷமர் ஜோசப் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.
இந்தியாவை போலவே வெஸ்ட்இண்டீஸ் அணியும் 'லீக்' சுற்றில் தோல்வியை தழுவாமல் 4 ஆட்டங்களிலும் (ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, நேபாளம், இத்தாலி) வெற்றிபெற்றது. 'சூப்பர் 8' சுற்றில் ஜிம்பாப்வேயை 107 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தென்ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
இரு அணிகளும் 30 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், வெஸ்ட் இண்டீஸ் 10-ல் வெற்றி பெற்றன. ஒரு போட்டி முடிவு இல்லை.
முன்னதாக நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதுகின்றன.
தென்ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.