புதுச்சேரி

இளம்பெண் குளித்ததை எட்டிப்பார்த்த புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை- 5 பேர் கைது

Published On 2025-07-22 15:07 IST   |   Update On 2025-07-22 15:07:00 IST
  • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுரு இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
  • அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி பாகூர் அருகே கரையாம்புத்தூர்-பனையடிக்குப்பம் ரோட்டில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன்குட்டை கொட்டகை உள்ளது.

இங்கு வாலிபர் ஒருவர் நேற்று காலை ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தவர் பனையடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு (வயது 34) வெல்டிங் தொழிலாளி என தெரியவந்தது. பின்னர் அவரை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுரு இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து கரையாம்புத்தூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ராஜகுருவை அடித்து கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு (27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தினேஷ்பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜகுருவை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக தினேஷ்பாபு மற்றும் அதே பகுதியை சேர்ந்த சர்மா (24), முகிலன் (20), சுமித் (20), கரையாம்புத்தூர் அச்சுதன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ராஜகுருவை அடித்து கொலை செய்தது ஏன் என்பது குறித்து தினேஷ் பாபு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது தங்கையை திருமணம் செய்து கொடுத்துள்ளோம். கணவர் வீட்டில் எனது தங்கை குளித்ததை மாடியில் இருந்து ராஜகுரு பார்த்துள்ளார்.

இதனை அறிந்த எனக்கு ராஜகுரு மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. இதனால் நான் எனது கூட்டளிகளுடன் சேர்ந்து ராஜகுருவை அடித்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அடித்து கொலை செய்யப்பட்ட ராஜகுருவுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News