பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த தெலங்கானா அரசு!
- மாநிலம் முழுவதும் சுமார் 37 இடங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவர்கள், சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றுகூறலாம்.
ஹைதராபாத்தில் 'பிரணாம்' என்ற முதியோர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்களை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று திறந்துவைத்தார். மாநிலம் முழுவதும் சுமார் 37 இடங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சமூகத் தொடர்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மையங்கள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் முதியோர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் போன்றவை செய்து தரப்பட்டுள்ளன.
இந்த பராமரிப்பு மையங்கள் திறப்புவிழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி பெற்றோரை கைவிடும், பெற்றோருக்கு நிதி உதவி செய்ய தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தின் ஒருபகுதியை பிடித்தம் செய்யும் சட்டத்தை தெலங்கானா அரசு தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ரேவந்த் ரெட்டி, "எந்தவொரு ஊழியரும் தனது பெற்றோரை கவனிக்கத் தவறினால், அவரது சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை கழிக்கப்பட்டு அவரது பெற்றோரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படும்," என தெரிவித்தார். மேலும் தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவர்கள், சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று நாம் கூறலாம். தங்களின் ஊதியம் பெற்றோருக்கு உபயோகப்படாவிட்டால், நீங்கள் எப்படி இந்த சமூகத்துக்கு உபயோகப்படுவீர்கள்? எனவும் பேசியுள்ளார்.