சீனாவின் ஆதிக்கம், ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் முதுகெலும்பில்லாத மோடி அரசு - காங்கிரஸ்
- பிரதமர் மோடி இன்று ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பின்வரும் சூழலில் மதிப்பிட வேண்டும்.
- யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நேற்று பிரதமர் மோடி சீனா சென்றார். ஷாங்காய் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த அவர் இரு நாட்டு உறவுகளை மீட்டெடுப்பது குறித்து அதிபர் ஜி ஜிங் பிங் உடன் விவாதித்தார்.
இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தியா-சீனாவின் நெருக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த இணக்கம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி இன்று ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பின்வரும் சூழலில் மதிப்பிட வேண்டும்.
ஜூன் 2020 இல், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பு தாக்குதல் நமது துணிச்சலான ஜவான்களில் 20 பேரின் உயிரை பறித்தது.
இருப்பினும், சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு பதிலாக, ஜூன் 19, 2020 அன்று, பிரதமர் மோடி சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். லடாக்கில் சீனாவுடனான எல்லையில் தற்போதைய நிலையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என ராணுவத் தலைவர் கோரினார்.
ஆனால் அதை மீட்டெடுப்பதற்கு பதிலாக சீனா தனது ஆக்கிரமிப்பை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு எதுவாக மோடி அதை சட்டபூர்வமாக்கினார்.
ஜூலை 4, 2025 அன்று, ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுடனான சீனாவின் கூட்டணி குறித்து வலுவாகவும் வெளிப்படையாகவும் பேசினார்.
இதற்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் அந்த கூட்டணியை அமைதியாக ஏற்றுக்கொண்டு, இப்போது அரசு முறை பயணங்கள் மூலம் சீனாவின் நன்மைக்கு பணியாற்றி வருகிறது.
யார்லுங் சாங்போவில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது. இது நமது வடகிழக்கு பகுதிக்கு மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் மோடி அரசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
சீனாவிலிருந்து கட்டுப்பாடற்ற வகையில் குப்பை போல இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், நமது சிறுகுறு தொழில்களை (MSME-களை) தொடர்ந்து அழித்து வருகிறது.
மற்ற நாடுகளைப் போலல்லாமல், சீன இறக்குமதியாளர்களுக்கு கட்டுப்பாடற்ற சுந்திரத்தை நாம் வழங்கி வருகிறோம்,
சீன ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கம், நமது அரசாங்கத்தின் முதுகெலும்பற்ற தன்மை ஆகியவற்றால் நமது 'புதிய இயல்பு' வரையறுக்கப்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.