இந்தியா

வாக்கு திருட்டால் பாதிக்கப்பட்டவர்களை மேடை ஏற்றி பல்வேறு ஆதாரங்களை காட்டிய ராகுல் காந்தி

Published On 2025-09-18 12:39 IST   |   Update On 2025-09-18 12:40:00 IST
  • கொதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரில் 15 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்
  • இது எப்படி நடந்தது என்று தனக்கு தெரியாது என அந்த கொதாபாய் பேசும் வீடியோவை வெளியிட்டார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது வாக்கு திருட்டால் பாதிக்கப்பட்டவர்களை மேடையில் ஏற்றி ராகுல் காந்தி ஆதாரங்களை கொடுத்தார். யாருடைய பெயரில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதோ அவரை நேரில் வரவைத்து ஊடகங்களிடம் காட்டினார்.

மேலும், கொதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரில் 15 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய ராகுல் காந்தி, இது எப்படி நடந்தது என்று தனக்கு தெரியாது என அந்த பெண் பேசும் வீடியோவையும் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, " தேர்தல் ஆணைய இணையதளத்தில் இரண்டு விண்ணப்பங்கள் 36 வினாடிகளில் தாக்கல் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன. தயவுசெய்து இந்தப் படிவங்களை நிரப்ப முயற்சி செய்து பாருங்கள், உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று பாருங்கள். இந்திய இளைஞர்களே, முயற்சி செய்து பாருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு படிவங்களை 36 வினாடிகளில் நிரப்ப முயற்சிக்கவும். இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

நான் குறிப்பிட்டுள்ள இந்த நபர் படிவத்தை நிரப்பிய நேரத்தை கவனியுங்கள். அவர் அதிகாலை 4:07 மணிக்கு எழுந்து திடீரென 38 வினாடிகளில் இரண்டு படிவங்களையும் நிரப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியை 100% ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன். இந்தியாவை காப்பாற்றுவது இனிமேல் முழுவதும் இந்தியர்கள் கையில் தான் இருக்கிறது. ராகுல் காந்தி இன்று வருவேன், உண்மையை சொல்வேன்., ஆனால் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News