இந்தியா

போராட்டம் வெற்றி: 1,777 ஏக்கர் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை வாபஸ் பெற்ற சித்தராமையா

Published On 2025-07-16 03:30 IST   |   Update On 2025-07-16 03:30:00 IST
  • அரசின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் மூன்றரை ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
  • கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான இறுதி அறிவிப்பை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

கர்நாடகாவில் நீண்ட போராட்டத்தின் பலனாக பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி தாலுகா விவசாயிகள் ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, அந்தப் பகுதியில் உள்ள சென்னராயப்பட்டணா ஹோப்ளியில் 1,777 ஏக்கர் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் அரசின் திட்டம் முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்தப் பகுதியில் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்காவை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

ஆனால் இதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் அரசின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் மூன்றரை ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் நீண்டகால போராட்டத்தைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை சித்தராமையா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான இறுதி அறிவிப்பை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

இழப்பீடு வழங்கிய பிறகு, நிலம் கொடுக்க முன்வரும் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நிலங்களைக் கையகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்திற்குப் பிறகு, நிலம் கையகப்படுத்தும் செயல்முறை முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவதாக சித்தராமையா அறிவித்தார். நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் பாராட்டினார்.

விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசாங்கத்தின் முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மக்கள் போராட்டத்தால் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. 

Tags:    

Similar News