டிரம்ப் உடனான பிரதமர் மோடியின் நட்பு "வெற்றுத்தனம்" என்பது நிரூபணமாகியுள்ளது: காங்கிரஸ் விமர்சனம்
- பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவின் அற்புதமான கூட்டாளி என பாகிஸ்தானுக்கு பாராட்டு.
- பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு டொனால்டு டிரம்ப் விருந்து.
பஹல்காம் தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்தியா எடுத்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக பாராட்டுகிறது.
இது இந்தியாவின் ராஜாங்க ரீதியிலான தோல்வி என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், நான்கு முக்கிய விசயங்களை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான பிரதமர் மோடியின் நட்பு ஒன்றுமில்லாத வெற்றுத்தனம் என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் இந்திய ராஜதந்திரத்தின் மோசமான தோல்வி, நான்கு உண்மைகளால் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. இவை பிரதமரும், அவரது தம்பட்டம் அடிப்பவர்களும் கூறும் கூற்றுகளை அம்பலப்படுத்துகின்றன.
மே 10ஆம் தேதியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போரை நிறுத்தவில்லை என்றால், அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என தான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்த முக்கிய காரணமாக இருந்துள்ளேன் என 25 முறை தெரிவித்துள்ளார்.
ஜூன் 10ஆம் தேதி, அமெரிக்காவின் மத்திய காமாண்டோ ராணுவத் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லா, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவின் அற்புதமான கூட்டாளி என பாகிஸ்தானை பாராட்டியுள்ளார்.
ஜூன் 18ஆம் தேதி இதுவரை இல்லாத நடைமுறையாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார்.
நேற்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதிலும் பாகிஸ்தானின் கூட்டாண்மைக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.