பிரதமர் மோடியின் தமிழக வருகை ரத்து: இதுதான் காரணம்
- வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளார் என கூறப்பட்டது.
- பிரதமர் மோடியின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது.
புதுடெல்லி:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, பிரதமர் மோடி கடந்த மாதம் 26-ம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த விழாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை, முப்பெரும் விழாவில் பங்கேற்று ரூ.1,000 மதிப்பிலான, பேரரசர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.
இதையடுத்து, வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளார் என்று கூறப்பட்டது. சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்வார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 26-ந்தேதி பிரதமர் தமிழகம் வரவிருந்த நிலையில் அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.
மாற்றுப் பணி மற்றும் முக்கிய அலுவல்கள் காரணமாக இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.