இந்தியா

புதிய பொருளாதார வழித்தடம் நாளைய உலகின் இணைப்பு: ஐரோப்பிய ஒன்றிய அதிபர்

Published On 2023-09-10 08:24 GMT   |   Update On 2023-09-10 08:24 GMT
  • எதிர்காலம் டிஜிட்டல் மயமாக இருக்கும் என்றார் உர்சுலா
  • ஏஐ குறித்து அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்ற வேண்டும்

ஜி20 கூட்டமைப்பின் 18-வது 2-நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதன் 3-வது அமர்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் உர்சுலா வான் டெர் லெயென் (Ursula von der Leyen) உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது:-

இன்று நான் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து பேச விரும்புகிறேன்.

ஏஐ-யால் சில அபாயங்களும் ஏற்படலாம். ஆனால், இது மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்குகிறது. விரைவாக மாறிவரும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது முக்கியமான கேள்வி. செயற்கை நுண்ணறிவை உருவாக்கி மென்பொருளை தயாரிப்பவர்கள் இதனை ஒழுங்குபடுத்த அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என அழைக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில், 2020-ல், செயற்கை நுண்ணறிவு குறித்த முதல் சட்டத்தை நாங்கள் முன்வைத்தோம். நம்பிக்கையை வளர்க்கும் அதே நேரத்தில் புதுமைகளை எளிதாக்க விரும்புகிறோம். இப்போது உலகம் என்ன செய்கிறது என்பதை பொறுத்தே நமது எதிர்காலம் வடிவமைக்கப்படும்.

ஐரோப்பா மற்றும் அதன் நட்பு நாடுகள் செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை களைந்து புதிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்கும் என நான் நம்புகிறேன். பாதுகாப்பான மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு சார்ந்த அமைப்புகளில் முதலீடுகளை வளர்க்க வேண்டும்.

ஏஐ-யினால் ஏற்படும் அபாயங்கள் குறித்த அறிவையும், மனிதகுலத்திற்கான சாத்தியமான நன்மைகளையும் அவர்கள் வழங்க வேண்டும். இதன் அபாயங்கள் குறித்த அறிவையும், மனிதகுலத்திற்கு சாத்தியமான நன்மைகளையும் நிபுணர்கள் வழங்க வேண்டும்.

இரண்டாவதாக டிஜிட்டல் பொது கட்டமைப்புகள் குறித்து பேச விரும்புகிறேன். இது வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு உண்மையான ஊக்க சக்தியாக இருக்கலாம். இந்தியா, தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளை வெளியிடுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.

இந்திய பிரதமர் கூறியதை கேட்டோம். அவருடைய முயற்சிகளை நாங்கள் மிகவும் ஆதரிக்கிறோம். சிறிய முதலீடுகளில் பெரும் பயன்கள் சாத்தியம் என நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். அனைவருக்குமான அனைவரும் நம்பக்கூடிய, சிறப்பாக இயங்கக்கூடிய ஒரு பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதிலேதான் வெற்றி அடங்கியிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் மற்றும் டிரான்ஸ்-ஆப்பிரிக்கா வழிப்பாதை எனும் திட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.

புதிய பொருளாதார வழித்தடம் (New Economic Corridor) எனப்படும் இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை நாளைய உலகின் வேகமான, சுருக்கமான மற்றும் தூய்மையான ஒரு இணைப்பு நடவடிக்கை என பாராட்டினார்.

Tags:    

Similar News