இந்தியா

தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் வழங்கியதை விட 3 மடங்கு நிதி அளித்ததாக கூறிய மோடி- ப. சிதம்பரம் விளக்கம்

Published On 2025-07-28 10:49 IST   |   Update On 2025-07-28 10:49:00 IST
  • கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நமது முக்கியமான உறுதிப்பாடு. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த ஒப்பேடு குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அவரது பதிவில், "பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி அவர்கள் பேசியிருக்கிறார்:

'ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பத்தாண்டுகளில் (2004-2014) தமிழ்நாட்டுக்கு அளித்த நிதியை விட மூன்று மடங்கு நிதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதினோறு ஆண்டுகளில் (2014-2025) தந்திருக்கிறது' என்று பெருமைபட்டிருக்கிறார்

இது அசாதரணமும் அல்ல, அதிசயமும் அல்ல!

2013-14 ஆம் ஆண்டில் மத்திய அரசின் வரவு-செலவு (பட்ஜெட்) தொகை

ரூ 15, 90, 434 கோடி

2024-25 ஆம் ஆண்டில் மத்திய அரசின் வரவு-செலவுத் தொகை

ரூ 47, 16, 487 கோடி

வரவு-செலவுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விடக் கூடுவது நடைமுறை; வளர்ந்து வரும் நாடுகளில் அது இயல்பாக நடப்பது

10 ஆண்டுகளில் வரவு-செலவு மொத்தத் தொகை மூன்று மடங்கு கூடும் போது ஒவ்வொரு இனத்திற்கும் திட்டத்திற்கும் செலவு கூடுவதும் நடைமுறை; அது இயல்பாக நடப்பது

10 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும்? பிரதமர் மோடியின் 10-11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்குப் பகிர்ந்தளித்த நிதியை விட மூன்று மடங்கு -- அல்லது அதற்கும் அதிகமான மடங்கு -- நிதி அளிக்கப்படும் என்பதும் அதிசயமாகாது; இயல்பாக நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News