இந்தியா

ஏற்கனவே 4 பெண்களை ஏமாற்றி திருமணம்: 5-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது

Published On 2025-01-23 12:21 IST   |   Update On 2025-01-23 12:21:00 IST
  • 2 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் நிதிஷ் பாபு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
  • நம்பிக்கை மீறல், கற்பழிப்பு, குடும்ப வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

திருவனந்தபுரம்:

'நான் அவன் இல்லை' என்ற திரைப்படத்தில் நகைகள் மற்றும் பணத்துக்காக நடிகர் ஜீவன் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வார். அதுபோன்ற ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

வாலிபர் ஒருவர் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, 5-வது திருமணத்துக்கு முயன்ற போது சிக்கினார். அது பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தண்ணிமூடு பகுதியை சேர்ந்த வாலிபர் நிதீஷ் பாபு(வயது31). இவர் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி கேரள மாநிலத்தின் வெவ்வேறு பகுதியை சேர்ந்த 4 இளம்பெண்களை திருமணம் செய்திருக்கிறார்.

திருவனந்தபுரம் நகரூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணைத்தான் 4-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் நிதிஷ் பாபு மற்றொரு இளம்பெண்ணை 5-வது திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அது அவரது 4-வது மனைவிக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அவர் தனது கணவரின் மீது வர்க்கலா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், வாலிபர் நிதிஷ் பாபு திருமணம் என்ற போர்வையில் பல பெண்களை ஏமாற்றி நகைகள் மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது.

மேலும் அவர் இதுவரை 4 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் எந்த திருமணத்தையும் முறைப்படி பதிவு எதுவும் செய்யவில்லை. ஒருவரிடம் நகைகள் மற்றும் பணத்தை பறித்தபிறகு தலைமறைவாகி விடுவாராம். பின்பு வேறொரு பெண்ணுடன் நட்பை ஏற்படுத்தி அவரை திருமணம் செய்திருக்கிறார்.

இப்படியாக 4 பெண்களை திருமணம் செய்துள்ளது விசாரணையில் வெளியானது. இதையடுத்து நிதிஷ் பாபுவை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நிதிஷ்பாபு மீது மேலும் 2 பெண்கள் புகார் கொடுத்தனர். தங்களை ஏமாற்றி நகைகள் மற்றும் பணத்தை மோசடி செய்துவிட்டதாக புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் விசாரித்த போது, பல பெண்களிடம் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.8 லட்சம் பணத்தை நிதிஷ் பாபு மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் நிதிஷ் பாபு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அவர் மீது நம்பிக்கை மீறல், கற்பழிப்பு, குடும்ப வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அவர் எத்தனை பெண்களை இதுபோன்று ஏமாற்றினார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News