இந்தியா

மகாராஷ்டிராவில் மீண்டும் மகாயுதி ஆட்சி.. கட்சிகளை உடைத்த ஷிண்டே - அஜித் பவாருக்கு கூடிய மவுசு

Published On 2024-11-23 11:34 IST   |   Update On 2024-11-23 12:02:00 IST
  • பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை ஆகும்
  • பிற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

மகாராஷ்டிர மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

288 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.

முன்னிலை நிலவரம் 

பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 221 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் [மகா விகாஸ் அகாதி] 55 இடங்களிலும் பிற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. எனவே பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.

 

'துரோகிகள்'

சரத் பாவர் என்சிபியை உடைத்து அஜித் பவாரும், சிவா சேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டேவும் பாஜகவுடன் சேர்ந்ததால் கடந்த 2022  இல் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக ஏற்று பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. எனவே கட்சிகள் உடைக்கப்பட்ட பின்னர் நடக்கும் இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் யாரை ஏற்பார்கள் என்ற கேள்வி நிலவியது. இந்தியா கூட்டணி என்சிபி தலைவர் சரத் பவார் துரோகிகளுக்கு மக்கள் இந்த தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

 

என்சிபி கடிகார சின்னத்தையும்  அஜித் பவார் தன்வசம் வைத்திருந்தார். இதற்கிடையே கடந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை விட இந்தியா கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்ததால் இந்த சட்டமன்றத் தேர்தலிலும் அது எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சரத் பவார் கணக்கு

இந்நிலையில் தற்போது கட்சிகளை உடைத்து சென்றவர்களை மக்கள் ஏற்றுக்கொண்தையே தற்போதைய நிலவரம் காட்டுகிறது. ஷிண்டே சிவ சேனா போட்டியிட்ட 81 இடங்களில் 53 இடங்கள் முன்னிலையில் உள்ளது. அஜித் பவார் என்சிபி போட்டியிட்ட 59 இடங்களில் 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஆனால் இந்தியா கூட்டணியை சேர்ந்த உத்தவ் சிவசேனா போட்டியிட்ட 95 இடங்களில்18 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. சரத் பவார் சிவசேனா போட்டியிட்ட 86 இடங்களில் 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.  இது சரத் பவார் கணக்கு பொய்த்ததையே உறுதி படுத்துவதாக உள்ளது.

கருத்துக்கணிப்புகள்

நியூஸ்18 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி 137 முதல் 157 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 126 முதல் 146 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. மற்றவை 2 முதல் 8 இடங்களில் வெற்றி பெறலாம்.

இதேபோல் ஏபிபி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க. கூட்டணி 150 முதல் 170 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 110 முதல் 130 இடங்களிலும் மற்றவை 8 முதல் 10 இடங்களில் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News