இந்தியா

'தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம்': நிர்மலா சீதாராமன் கருத்திற்கு காங்கிரஸ் கண்டனம்

Published On 2024-04-20 11:49 GMT   |   Update On 2024-04-20 11:49 GMT
  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் - நிர்மலா சீதாராமன்
  • பாஜக தோற்றுவிட்டால் அவர்களுக்கு இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள் - காங்கிரஸ்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

"வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.

தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் எம்.பி, "தேர்தல் பத்திர நன்கொடை முறையை திரும்பக் கொண்டு வருவோமென நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால், இந்த தேர்தலுக்கு அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதில் அவர்கள் தோற்றுவிட்டால் இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என பா.ஜ.க கூறுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பா.ஜ.க இப்போதும் விரும்புகிறது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எத்தனை கோடி கொள்ளையடிப்பார்கள் என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News