மாணவி பயன்படுத்திய செல்போனால் வெளிச்சத்துக்கு வந்த பாலியல் வன்கொடுமை- பஸ் டிரைவர் கைது
- உறவினர் ஒருவரின் வீட்டுக்கும் மாணவியை அழைத்துச் சென்றுள்ளார்.
- விலையுயர்ந்த செல்போனை அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்திருக்கிறார். அப்போது அந்த மாணவிக்கு தனியார் பஸ் டிரைவரான தீபின் என்பவர் அறிமுகமானார்.
கண்ணூர் அத்தாழக்குன்னு பகுதியை சேர்ந்தவரான அவர், தனது பஸ்சில் சென்று வந்த அந்த மாணவியிடம் தொடர்ந்து பேசி பழகி வந்திருக்கிறார். அதனை பயன்படுத்தி மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
மேலும் உறவினர் ஒருவரின் வீட்டுக்கும் மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஆசைவார்த்தை கூறி மாணவியை, டிரைவர் தீபின் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அவர் உறவினரின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற போதெல்லாம் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
அதனை மாணவி வெளியில் கூறாமல் இருப்பதற்காக, விலையுயர்ந்த செல்போனை அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போனை மாணவி ரகசியமாக வைத்து பயன்படுத்தி உள்ளார். இந்த நிலையில் மாணிவியிடம் புதிய செல்போன் இருப்பதை அவரது குடும்பத்தினர் பார்த்துவிட்டனர்.
அதுகுறித்து அவர்கள் விசாரித்தபோது, தனியார் பஸ் டிரைவரால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி பஸ் டிரைவர் தீபினை கைது செய்தனர்.
மாணவியை தனியார் பஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், மாணவி பயன்படுத்திய செல்போனால் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.