இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: நியாயமான விசாரணை தேவை என்பதால் சி.பி.ஐ. விசாரணை - சுப்ரீம் கோர்ட்

Published On 2025-10-13 14:12 IST   |   Update On 2025-10-13 14:12:00 IST
  • சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
  • சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பல கேள்விகள் எழுவதால், நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.

புதுடெல்லி:

கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்தும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதே போல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவன் பிருதிக்கின் தந்தை பன்னீர் செல்வம், பாத்திமா பானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோர் இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி பா.ஜ.க. தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

கரூரில் கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கரூரில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை.

இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி தீர்ப்பை 13-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (திங்கட்கிழமை) நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் தீர்ப்பு கூறினார்கள். அதில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

மேலும் சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம். சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்த குழுவில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் இருப்பார்கள்.

இந்த குழுவில் உள்ள 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கக்கூடாது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி மாதம்தோறும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டின் செயல்பாடு மற்றும் 2 பேர் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கில் நியாயமான விசாரணை தேவை என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பல கேள்விகள் எழுவதால், நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி மோசடியாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் முறையிட்டனர். அதாவது மனுதாரர்களுக்கு தெரியாமலேயே அவர்களது பெயரில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரவு பிறப்பித்த 2 வழக்குகளில் மனுதாரர்கள் மனுவை தாக்கல் செய்யவே இல்லை. எனவே இதை சுப்ரீம் கோர்ட்டு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

இதையடுத்து நீதிபதிகள், "மனுதாக்கலில் மோசடி நடந்திருந்தால் அதையும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடுவோம்" என்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பானது தமிழக வெற்றிக்கழகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News