மீண்டும் எம்.பி ஆகலாம்..! வைகோவிற்கு வலை வீசிய மத்திய அமைச்சர்
- பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மாநிலங்களவையில் வைகோ உரையாற்றினார்.
- மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கும், வார்த்தெடுத்த முரசொலி மாறனுக்கும் நன்றி என்று வைகோ கூறினார்.
பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை.
இதனால் 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வைகோ இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மாநிலங்களவையில் வைகோ உரையாற்றினார்.
அப்போது நாடாளுமன்றத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி வைகோ தெரிவித்தார். குறிப்பாக என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கும், வார்த்தெடுத்த முரசொலி மாறனுக்கும் நன்றி என்று வைகோ கூறினார்.
இந்நிலையில், வைகோ எங்களோடு (பாஜக கூட்டணி) வந்தால் மீண்டும் எம்.பி ஆகலாம் என்று இன்றுடன் வைகோவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியுள்ளார்.