வெளுத்துவாங்கும் மழை- கேரளாவில் மழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழப்பு
- ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
- பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இன்றும் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பத்தினம்திட்டா, காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கேரளாவில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன.
பலத்த காற்று காரணமாக மின்கம்பி அறுந்து விழந்ததால் ஓடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
கோழிக்கோடு தாமரச் சேரி அருகே உள்ள கோடஞ்சேரி பகுதியை சேர்ந்த பிஜூ சந்திரன்-ஷீபா பிஜூ தம்பதியரின் மகன்களான நிதின்(13), இவின்(11) ஆகிய இருவரும் அரக்கல்பாடிதொடு என்ற இடத்தில் உள்ள ஓடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த காற்று காரணமாக அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் கிளை முறிந்து மின்கம்பியின் மீது விழுந்தது. இதனால் மின்கம்பி அறுந்து சிறு வர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஓடைக்குள் விழுந்தது. இதனால் ஓடை தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சிறுவர்களை தாக்கியது. இதில் சிறுவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்து விட்டனர்.
கோழிக்கோட்டில் பலத்த காற்று காரணமாக தென்னை மரம் முறிந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பவித்ரன்(வயது64) என்ப வரின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இவர்களையும் சேர்த்து கேரளாவில் மழைக்கு இது வரை 9 பேர் பலியாகி இருக்கின்றனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.