null
கமிஷனே கிடையாது.. ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் Rapido அதிரடி என்ட்ரி
- ரேபிடோவின் 'Ownly' எந்த கமிஷனும் வசூலிப்பதில்லை.
- தன்னிடம் உள்ள மிகப்பெரிய பைக் டாக்ஸி நெட்வொர்க்கை உணவு டெலிவரிக்கு பயன்படுத்துகிறது.
பைக் டாக்சி மற்றும் கார் டாக்சி சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனம் ரேபிடோ.
டாக்சி சேவை துறையில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருந்து வரும் ரேபிடோ, தற்போது உணவு டெலிவரி துறையில் ஸ்விகி மற்றும் ஜொமாடோ நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.
தனது புதிய உணவு டெலிவரி செயலியான 'Ownly' யை கர்நாடகாவின் பெங்களூருவில் ரேபிடோ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பெங்களூருவில் சில பகுதிகளில் மட்டும் சோதனை முறையில் இயங்கி வந்த இந்தச் சேவை, மார்ச் 3 முதல் நகரம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக ஸ்விகி, ஜொமாடோ நிறுவனங்கள் உணவகங்களிடம் இருந்து 20% முதல் 30% வரை கமிஷன் வசூலிக்கும். ஆனால், ரேபிடோவின் 'Ownly' உணவகங்களிடம் இருந்து எந்தக் கமிஷனும் வசூலிப்பதில்லை.
கமிஷன் இல்லாததால், உணவகங்கள் தங்களின் மெனு விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு உணவகத்தில் விற்கும் அதே விலையிலேயே உணவு கிடைக்கும்.
டெலிவரி செலவுக்கு மட்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை Ownly வசூலிக்கிறது.
ஏற்கனவே தன்னிடம் உள்ள மிகப்பெரிய பைக் டாக்ஸி நெட்வொர்க்கை உணவு டெலிவரிக்கும் ரேபிடோ பயன்படுத்தி கொள்கிறது.
தற்போது பெங்களூருவில் சுமார் 20,000 உணவகங்கள் இந்தத் தளத்தில் இணைந்துள்ளன. 'Ownly' செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
மறைமுகக் கட்டணங்கள் அல்லது பிளாட்பார்ம் கட்டணங்கள் இல்லாததால் உணவு ஆர்டர் செய்ய இந்த செயலியை பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த சேவை விரைவில் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.