இந்தியா

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெண்களுக்கு ரூ.5,000... யாருக்கெல்லாம் வரும்?

Published On 2026-03-05 17:57 IST   |   Update On 2026-03-05 17:57:00 IST
  • ஜனவரியில் ரேஷன் கார்டுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கியது.
  • ரூ.5 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் தமிழ்நாடு அரசு வரவுவைத்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி தமிழ்நாடு, புதுவையில் ஆளும் கட்சியினர் அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு அரசு கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கியது. அதனைப் பின்பற்றி புதுச்சேரியில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பா. ஜனதா கூட்டணி அரசு, ரேஷன் கார்டுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, குடும்ப தலைவிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உரிமைத் தொகை, தேர்தல் அறிவிப்பு வெளியானால் தடைபடும் என்பதற்காக 3 மாதத்திற்கான தொகை மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ.2.ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் தமிழ்நாடு அரசு வரவுவைத்தது.

இந்த நடவடிக்கை புதுச்சேரி மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல் அமைச்சர் ரங்கசாமி ஆளுநரை சந்தித்து, புதுச்சேரி குடும்ப தலைவிகளுக்கும் 2 மாதங்களுக்கான நிதியை முன் கூட்டியே வழங்க கோரினார். இதனையடுத்து ஆளுநர் கைலாஷ்நாதன் தனது முகநுாலில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (சிகப்பு ரேஷன் கார்டு) 63 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு, அவர்களின் குடும்ப தேவைகளை கருத்தில் கொண்டு அடுத்த 2 மாதங்களுக்கான மாதாந்திர நிதியுதவி (மாதம் ரூ.2,500 வீதம்) மொத்தம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்த அறிவிப்பு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி குடும்ப தலைவிகளிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அநேகமாக இன்னும் ஓரிரு நாளில் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Tags:    

Similar News