தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவை.. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வாக்குரிமையை பறிக்க சதி - கார்கே
- இந்த செயல்முறை பீகாரில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் பரவி வருகிறது.
- இந்த விஷயத்தின் தீவிரத்தை உச்ச நீதிமன்றமும் ஒப்புக்கொண்டுள்ளது.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் முடிக்கப்பட்டு இன்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் உள்ளோரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுடன் இணைந்து, நாட்டின் ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
டெல்லியில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த சட்ட மாநாட்டில் பேசிய கார்கே, "தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து வேண்டுமென்றே நீக்கி வருகிறது.
பீகாரில் 65 லட்சம் முதல் 1 கோடி வரையிலான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தற்செயல் நிகழ்வு அல்ல, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை தேர்தல் செயல்முறையிலிருந்து விலக்குவதற்கான நன்கு திட்டமிடப்பட்ட சதி இது.
அரசு தரவுகளை மேற்கோள் காட்டி, 70 கோடி வாக்காளர்களில் 1 கோடி பெயர்கள் எந்த உறுதியான காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டால், அது அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும். இத்தகைய பட்டியல்களை ஆணையமே வெளியிட்டு வருகிறது.
இந்த செயல்முறை பீகாரில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் பரவி வருகிறது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, அது ஒரு தேசிய போக்காக மாறும்போது, அதை அம்பலப்படுத்துவது அவசியமாகிறது.
அரசியலமைப்பு பாதுகாப்பை பலவீனப்படுத்த தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் இணைந்து செயல்படுகிறது.
இந்த விஷயத்தின் தீவிரத்தை உச்ச நீதிமன்றமும் ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் பல விசாரணைகள் இருந்தபோதிலும், ஆணையம் இதுவரை தனது அணுகுமுறையை மாற்றவில்லை.
சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. பிரதமரின் பணி அரசியலமைப்பைப் பாதுகாப்பதே தவிர, அதை மிதிப்பது அல்ல.
பொதுமக்கள் அவரை அரசியலமைப்பைப் பாதுகாக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர், அழிப்பதற்கு அல்ல" என்று தெரிவித்தார்.