இந்தியா

டெல்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலி: பெங்களூருவில் பாக்., சீனா நாட்டினரின் சொத்துகளை ஏலம் விட முடிவு

Published On 2025-11-13 13:20 IST   |   Update On 2025-11-13 13:20:00 IST
  • இந்தியாவின் எதிரி சொத்து காப்பாளர் துறை அடையாளம் கண்டறிந்துள்ளது.
  • சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது.

உலக அளவில் இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பெங்களூரு புகழ்பெற்று விளங்குகிறது. டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த பயங்கரம் நடந்துள்ள நிலையில் பெங்களூருவில் பாகிஸ்தான், சீனா நாட்டினரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 அசையா சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சொத்துகள் எதிரி சொத்து சட்டம் 1968-ன் கீழ் எதிரி சொத்துகளாக கண்டறியப்பட்டு உள்ளன. எதிரி நாடுகளுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்த சொத்து, 'எதிரி சொத்து' என அழைக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை 1968-ம் ஆண்டு எதிரி சொத்து சட்டத்தின் கீழ் எடுக்கப்படுகிறது. தற்போது பெங்களூரு ராஜ்பவன் ரோட்டில் உள்ள இந்த சொத்துகள், எதிரி சொத்துகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதாவது கப்பன் பூங்கா அருகே ராஜ்பவன் சாலையில் வார்டு எண் 78-ல் மொத்தம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 504 சதுர அடி பரப்பளவு கொண்ட சொத்து கண்டறியப்பட்டுள்ளது.

விக்டோரியா சாலையில் சிவில் ஸ்டேசன் பகுதியில் 8 ஆயிரத்து 845 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு அசையா சொத்து உள்ளது. கலாசிபாளையம் 2-வது பிரதான சாலையில் 2 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டு மனை உள்ளது.

இந்த 4 அசையா சொத்துகளும் எதிரி சொத்துக்கள் என இந்தியாவின் எதிரி சொத்து காப்பாளர் துறை அடையாளம் கண்டறிந்துள்ளது.

பெங்களூரு மாநகர மாவட்ட நிர்வாகம் கர்நாடக அரசின் அறிவுறுத்தலின் படி சொத்துகளின் மதிப்பீட்டு பணியை முடித்துள்ளது. அதாவது அரசின் நில மதிப்பீடு, சந்தை நில மதிப்பீடு ஆகிய 2 முறைகளில் சொத்துகளின் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News